குழக முனிவர் வழிபட்டதாலும், தென்கோடியில் இருப்பதாலும் இத்தலம் 'கோடிக்குழகர்' என்ற பெயர் பற்றது. திருப்பாற்கடலை கடைந்தபோது கிடைத்த அமுதத்தை வாயு பகவான் எடுத்துச் சென்றபோது கீழே சிந்திய அமுதமே லிங்க வடிவம் பெற்று இத்தலத்து மூலவராக இருப்பதாகத் தலபுராணம் கூறுகிறது.
இத்தலத்து மூலவர் 'அமிர்தகடேஸ்வரர்' என்னும் திருநாமத்துடன், சதுர வடிவ ஆவுடையுடன், லிங்க வடிவில் காட்சி அளிக்கின்றார். அம்பாள் 'மையார் தடங்கண்ணியம்மை' என்னும் திருநாமத்துடன் காட்சி தருகின்றாள். 'காடு கிழாள்' என்னும் மற்றொரு அம்பாள் சன்னதியும் உள்ளது.
பிரகாரத்தில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமண்யர் உள்ளார். அவர் அமிர்தா சுப்பிரமண்யர் என்னும் நாமத்துடன் ஒரு முகம், ஆறு கரங்களுடன், கையில் அமிர்த கலசம் கொண்டு வடக்கு நோக்கிய மயில் மீது அமர்ந்த நிலையில் காட்சியளிக்கின்றார். குழக முனிவர் திருவுருவம் உள்ளது. இக்கோயிலில் நவக்கிரங்கள் வரிசையாக அமைந்துள்ளன.
கோயிலுக்கு கிழக்கில் சிறிது தூரத்தில் உள்ள கடல் ருத்ரகோடி தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. இங்கு ஆடி அமாவாசை, மாசி மகம் முதலிய நாட்களில் ஆயிரக்கணக்கான மக்கள் புனித நீராடுவர்.
இராமபிரான் இங்கு வந்து இலங்கையை பார்வையிட்டார் என்று கூறப்படுகிறது. அதற்கு அடையாளமாக வேதராண்யத்திலிருந்து வரும் வழியில் சுமார் 6 கி.மீ. தொலைவில் இடதுபக்கம் 'இராமர் பாதம்' என்னும் இடம் உள்ளது.
கோயிலில் இருந்து ஊருக்குள் சென்றால் கடற்கரைக்கு செல்லும் வழியில் 'நவகோடிசித்தர் கோயில்' ஒன்றும் உள்ளது. கோடியக்கரை பறவைகள் சரணாலயம் பார்க்க வேண்டிய ஒன்று.
அருணகிரிநாதர் இத்தலத்து முருகப் பெருமானை தமது திருப்புகழில் பாடியுள்ளார்.
சுந்தரர் ஒரு பதிகம் பாடியுள்ளார்.
இக்கோயில் காலை 6.30 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|